- அழகுகாலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள்.சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்
செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
———-2. கடல்
மணல், அலைகள்
ஊருக்குக் கிழக்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம் போல்
மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ கல்வி
நிலையத்தின் இளைஞர் போலஎ
பூரிப்பால் ஏறும் வீழும்;
புரண்டிடும்; பாராய் தம்பி.மணற்கரையில் நண்டுகள்
வெள்ளிய அன்னக் கூட்டம்
விளையாடி வீழ்வ தைப்போல
துள்ளியே அலைகள் மேன்மேல்
கரையினிற் சுழன்று வீழும்!
வெள்ளலை, கரையைத் தொட்டு
மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளகள் ஓடி ஆடிப்
பெரியதோர் வியப்பைச் செய்யும்.புரட்சிக்கப்பால் அமைதி
புரட்சிக்கப்பால் அமைதி பொலியுமாம். அதுபோல், ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
கலகங்கள் விளைக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட் கப்பால்
கடலிடை அமைதி அன்றோ!
பெருநீரை வான்மு கக்கும்;
வான்நிறம் பெருநீர் வாங்கும்!கடலின் கண்கொள்ளாக் காட்சி
பெரும்புனல் நிலையும், வானிற்
பிணந்த அக் கரையும், இப்பால்
ஒருங்காக வடக்கும் தெற்கும்
ஓடு நீர்ப் பரப்பும் காண
இருவிழிச் சிறகால் நெஞ்சம்
எழுந்திடும்; முழுதும் காண
ஒருகோடிச் சிறகு வேண்டும்
ஓகோகோ எனப்பின் வாங்கும்!கடலும் இளங் கதிரும்
எழுந்தது செங்க திர்தான்
கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத் தூற்றல்!
வெளியெலாம் ஓளியின் வீச்சு!
முழங்கிய நீர்ப்ப ரப்பின்
முழுதும்பொன் னொளிப றக்கும்.
பழங்கால இயற்கை செய்யும்
புதுக்காட்சி பருகு தம்பி!கடலும் வானும்
அக்கரை சோலை போலத்
தோன்றிடும்! அந்தச் சோலை,
திக்கெலாம் தெரியக் காட்டும்
இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்
கைக்கொள்ள அம்மு கில்கள்
போராடும்! கருவா னத்தை
மொய்த்துமே செவ்வா னாக்கி
முடித்திடும்! பாராய் தம்பி!எழுந்த கதிர்
இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே
இருளின்மேல் சினத்தை வைத்தான்;
களித்தன கடலின் புட்கள்;
எழுந்தன கைகள் கொட்டி!
ஒளிந்தது காரி ருள்போய்!
உள்ளத்தில் உவகை பூக்க
இளங்கதிர், பொன்னிண றத்தை
எங்கணும் இறைக்க லானான்.கடல் முழக்கம்
கடல்நீரும், நீல வானும்
கைகோக்கும்! அதற் கிதற்கும்
இடையிலே கிடைக்கும் வெள்ளம்
எழில்வீணை; அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத் தின்பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி
வண்கடல் பண்பா டல் கேள்!நடுப்பகலிற் கடலின் காட்சி
செழுங்கதிர் உச்சி ஏறிச்
செந்தணல் வீசு தல்பார்!
புழுங்கிய மக்கள் தம்மைக்
குளிர்காற்றால் புதுமை செய்து
முழங்கிற்றுக் கடல்! இவ்வைய
முழுவதும் வாழ்விற் செம்மை
வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம்
வளர்கின்ற கடல்பார் தம்பி!நிலவிற் கடல்
பொன்னுடை களைந்து, வேறே
புதிதான முத்துச் சேலை
தன்இடை அணிந்தாள் அந்தத்
தடங்கடற் பெண்ணாள், தம்பி
என்னென்று கேள்; அதோபார்
எழில் நிலா ஒளிகொட் டிற்று!
மன்னியே வாழி என்று
கடலினை வாழ்த்தாய் தம்பி.
————3. தென்றல்
மென்காற்றும் வன்காற்றும்
அண்டங்கள் கோடி கோடி
அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில்
கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் துள் துளாகச்
செயினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சப் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்!தென்னாடுபெற்ற செல்வம்
உன்னிடம் அமைந் திருக்கும்
உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும்
தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத்
தென்றலே உன்இன் பத்தைத்
தென்னாடுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்?தென்றலின் நலம்
குளிர்நறுஞ் சந்தனஞ் சார்
பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே
மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல
கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன்
வரவினை வாழ்த்தா ருண்டா?அசைவின் பயன்
உன்அரும் உருவம் காணேன்
ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச்
சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை
அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை
இணைத்திடல் அன்பே அன்றோ?தென்றலின் குறும்பு
உலைத்தீயை ஊது கின்றாய்
உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்
மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து
குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
விலக்கினும், விலக்கார் உன்னை!குழந்தையும் தென்றலும்
இழந்திட்டால் உயிர்வா ழாத
என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது
குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினத்துக், கண்ணிற்
குளிர்செய்து, மேனி யெங்கும்
வழிந்தோடிக் கிலு கிலுப்பை
தன்னையு ம் அசைப்பாய் வாழி.தென்றல் இன்பம்
இருந்தஓர் மனமும், மிக்க
இனியதோர் குளிரும் கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும்
கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு
மாற்றாகிப் பின்னர் வானிற்
பருந்தாகி இளங்கி ளைமேற்
பறந்தோடிப் பாடு கின்றாய்!தென்றலின் பயன்
எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே
எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ
வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
“எழுதிய தாளை நீ ஏன்
கிளப்பினை” என்று கேட்டேன்,
“புழுதியைத் துடைத்தேன்” என்றாய்;
மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை!தென்றலிற்கு நன்றி
கமுகொடு, நெடிய தென்னை,
கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை,
உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்க
தென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான்
கனவிலும் மறவேன் அன்றோ?தென்றலின் விளையாட்டு
களச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளயா டிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லேநீ!
———-4. காடு
மலைப்பு வழி
நாடினேன்; நடந்தேன்; என்றன்
நகரஓ வியத்தைத் தாண்டித்
தேடினேன்; சிற்றுர் தந்த
காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;
பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த
பாதையை இழந்தேன். அங்கே
மாடிவீ டொன்று மில்லை
மரங்களோ பேசவில்ல!வழியடையாளம்
மேன் மேலும் நடந்தேன்; அங்கே
‘மேற்றிசை வானம்’ என்னை
“நான் தம்பி என்னை நோக்கி
நட தம்பி” எனச்சொல் லிற்று!
வான்வரை மேற்குத் திக்கை
மறைத்திட்ட புகைநீ லத்தைத்
தேன்கண்டாற் போலே கண்டேன்,
திகழ் காடு நோக்கிச் சென்றேன்.காட்டின் அழகு
வன்மை கொள் பருக்கைக் கல்லின்
வழியெல்லாம் பள்ளம், மேடு!
முன்னாக இறங்கி ஏறி
முதலைகள் கிடப்ப தைப்போல்
சின்னதும் பெரிது மான
வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;
“கன்மாடம்” எனும்பு றாக்கள்
கற்களைப் பொறுக்கக் கண்டேன்.மயிலின் வரவேற்பு
மகிழ்ந்துநான் ஏகும் போதில்
காடுதன் மயிலை ஏவி
அகவலால் வரவேற் பொன்றை
அனுப்பிற்று கொன்றைக் காய்க்கு
நிகரான வாலை ஆட்டிக்
காரெலி நின்று நின்று
நகர்ந்தது. கூடச் சென்றேன்
நற்பாதை காட்டும் என்றே.தமிழா நீ வாழ்க
முகத்திலே கொடுவாள் மீசை
வேடன், என் எதிரில் வந்தான்.
அகப்பட்ட பறவை காட்ட,
அவற்றின்பேர் கேட்டேன்! வேடன்
வகைபட்ட பரத்து வாசன்
என்பதை வலியன் என்றான்;
சகோ தரத்தைச் செம்போத் தென்றான்!
தமிழா நீ வாழ்க என்றேன்.வேடன் வழி கூறினான்
“போம் அங்கே! பாரும் அந்தப்
புன எலு மிச்சை” என்றான்.
” ஆம்” என்றேன்”. “அதைத்தான் ஐயா
குருந்தென்றும் அறைவார்” என்றான்
“ஆம்” என்றேன் தெரிந்த வன்போல்!
“அப்பக்கம் நோக்கிச் சென்றால்
மாமரம் இருக்கும் அந்த
வழிச்செல்வீர்” என்றான் சென்றேன்.காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்
செருந்தி, யாச்சா, இலந்தை,
தேக்கீந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு முங்கில்; இரு குரங்கு
கண்டேன் பொன் னுசல் ஆடல்!
குருந்தடையாளம் கண்டேன்
கோணல்மா மரமும் கண்டேன்!பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த
மான்கன்றை நரியடித்ததுஆனைஒன் றிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
பூனை ஒன் றணுகும்; அங்கே
புலி ஒன்று தோன்றும்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக்கா ணாது நிற்கும்!
அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.மயிலுக்கு கரடி வாழ்த்து
இழந்தபெட் டையினைக் கண்டே
எழுந்தோடும் சேவல் வாலின்
கொழுந்துபட் டெழுந்த கூட்டக்
கொசுக்களை முகில்தான் என்று
தழைந்ததன் படம்விரிக்கும்
தனிமயிலால், அடைத் “தேன்”
வழிந்திடும்; கரடி வந்து
மயிலுக்கு வாழ்த்துக் கூறும்.பயன்பல விளைக்கும் காடு
ஆடிய கிளைகள் தோறும்
கொடிதொங்கி, அசையும் ! புட்கள்
பாடிய படியி ருக்கும் !
படைவிலங் கொன்றை யொன்று
தேடிய படியிருக்கும் !
காற்றோடு சருகும் சேர்ந்து
நீடிசை காட்டா நிற்கும் ;
பயன்தந்து நிற்கும் காடே !
———5. குன்றம்
மாலை வானும் குன்றமும்
தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னிலே ஓர்
செங்கதிர் மாணிக் கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை,
செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
மரகதத் திருமே னிக்கு
மங்காத பவழம் போர்த்து
வைத்தது வையம் காண !ஒளியும் குன்றும்
அருவிகள், வயிரத் தொங்கல் !
அடர்கொடி, பச்சைப் பட்டே !
குருவிகள், தங்கக் கட்டி !
குளிர்மலர், மணியின் குப்பை !
எருதின்மேற் பாயும் வேங்கை,
நிலவுமேல் எழுந்த மின்னல்,
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள் பார டாநீ.கிளி எறிதல்
தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தி
தழைபசுஞ் சிறக டித்து
மலைப்புன்னை மரத்தின் பக்கம்
வந்திடும் கிளிக்கூட் டத்தில்,
சிலைப்பெண்ணாள் கவண் எறிந்து,
வீழ்த்தினேன் சிறகை என்றாள்.
குலுக்கென்று சிரித்தொ ருத்தி
“கொழும்புன்னை இலைகள்” என்றாள்!குறவன் மயக்கம்
பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி
ஆதொண்டைப் பழம்பார்த் தானை
உதட்டினைப் பிதுக்கிக் “கோவை”
உன்குறி பிழைஎன் றோதும் !
குதித்தடி மான்மான் என்று
குறுந்தடி துக்கு வானைக்
கொதிக்காதே நான் அம்மானே
எனஓர் பெண் கூறி நிற்பாள்!குன்றச் சாரல், பிற
குன்றத்தின் “சாரல்”, குன்றின்
அருவிகள் குதிக்கும் “பொய்கை”
பன்றிகள் மணற்கி ழங்கு
பறித்திடும் “ஊக்கம்” நல்ல
குன்றியின் மணியால், வெண்மைக்
கொம்பினால் அணிகள் பூண்டு
நின்றிடும் குறத்தி யர்கள்
“நிலாமுகம்” பாரடா நீ !குறத்தியர்
“நிறைதினைக் கதிர்” முதிர்ந்து
நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்
புறத்தினில் தேர் போல் நீண்ட
புதுப்பரண் அமைத்து, மேலே
குறத்தியர் கவண் எடுத்துக்
குறிப்பார்க்கும் விழி, நீ லப்பூ!
எறியும்கை, செங்காந் தட்பூ!
உடுக்கைதான் எழில்இ டுப்பே !மங்கிய வானில் குன்றின் காட்சி
மறைகின்றான் பரிதி; குன்ற
மங்கையோ ஒளியிழந்து,
நிறைமூங்கில் இளங்கை நீட்டி
வாராயோ எனஅ ழைப்பாள்!
சிறுபுட்கள் அலறும்! யானை
இருப்பிடம் சேரும்! அங்கோர்
குறுநரி ஊளைச் சங்கால்
இருள் இருள் என்று கூவும்!நிலவும் குன்றும்
இருந்தஓர் கருந்தி ரைக்குள்
இட்டபொற் குவியல் போலே,
கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே
கருத்துக்கள் இருத்தல் போலே
இருள்மூடிற் றுக்குன் றத்தை!
நாழிகை இரண்டு செல்லத்
திரும்பிற்று நிலவு ; குன்றம்
திகழ்ந்தது முத்துப் போலே!எழில் பெற்ற குன்றம்
நீலமுக் காட்டுக் காரி
நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த
பாலிலே உறைமோர் ஊற்றிப்
பருமத்தால் கடைந்து, பானை
மேலுற்ற வெண்ணெய் அள்ளிக்
குன்றின்மேல் வீசி விட்டாள்!
ஏலுமட் டுந்தோ ழாநீ
எடுத்துண்பாய் எழலை எல்லாம்!முகில் மொய்த்த குன்றம்
ஆனைகள், முதலைக் கூட்டம்,
ஆயிரம் கருங்கு ரங்கு,
வானிலே காட்டி வந்த
வண்முகில் ஒன்று கூடிப்
பானயில் ஊற்று கின்ற
பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
போனது. அடிமை நெஞ்சம்
புகைதல்போல் தோன்றும் குன்றம்!
———6. ஆறு
நீரற்ற ஆற்றுப்பாதை
இருபக்கம் மண்மே டிட்டும்,
இடைஆழ்ந்தும், நீள மான
ஒருபாதை கண்டேன், அந்தப்
பாதையின் உள்இ டத்தில்
உரித்தநற் றாழம் பூவின்
நறும்பொடி உதிர்த்த தைப்போல்
பெருமணல், அதன்மே லெல்லாம்
கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!வழிப் போக்கு
மணல்சுடும்; வழிச்செல் வோர்கள்,
இறங்கியும் ஏறியும் போய்
அணகரை மேட்டின் அண்டை
அடர்மர நிழலில் நின்று
தணலேறும் தம்கால் ஆற்றிச்
சாலைகண் டூரைக் காண்பார்.
அணிநிலம் நடுவில் ஆற்றுப்
பாதை “வான்வில்” போல் தோன்றும்.வெள்ளம் வருமுன்
வெப்பத்தால் வெதும்பு கின்ற
வெளியெலாம் குளிர்காற் றொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக் கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.வெள்ளத்தின் தோற்றம்
ஒலிஒன்று கேட்டேன். ஓஓ
புதுப்புனல்! பெரிய வெள்ளம்,
சலசல என்று பாய்ந்து
வரக்கண்டேன் தணல் நிறத்தில்
நிலவொத்த நிறம்க லந்து
நெடுவானின் சுடரும் வாங்கிப்
பொலிந்தது! கோடை யாட்சி
மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம்.வெள்ளப் பாய்ச்சல்
பெருஞ்சிங்கம் அரைய வீழும்
யானைபோல் பெருகிப் பாய்ந்து
வரும்வெள்ளம், மோத லாலே
மணற்கரை இடிந்து வீழும் !
மருங்கினில் இருந்த ஆலும்
மல்லாந்து வீழும் ஆற்றில்!
பருந்து, மேற் பறக்கும்! நீரில்,
பட்டாவைச் சுழற்றும் வாளை!வெள்ளத்தின் வரவறிதல்
கரையோரப் புலத்தில் மேயும்
காலிகள் கடமை எண்ணும்!
தரையினிற் காதை ஊன்றிச்
சரிசரி புதுவெள் ளத்தின்
திரைமோதும் ஒலிதான் என்று
சிறுவர்கள் செங்கை காட்டிப்
பெரியோரைக் கூவு கின்றார்;
பேச்சொன்றே ஒலியோ நீளம்!வெள்ளத்தின் ஒளி அழகு
இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள் !நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
மரகத வீச்சு! நீரில்
மிதக்கின்ற மரங்க ளின்மேல்
ஒருநாரை வெண்டா ழம்பூ!
உவப்புக்கோ உவமை இல்லை.வெள்ளம் எனும் படைக்கு மரங்களின்வாழ்த்து
ஒரேவகை ஆடை பூண்ட
பெரும்படை ஒழுங்காய் நின்று
சரேலெனப் பகைமேற் பாயும்
தன்மைபோல் ஆற்று வெள்ளம்,
இராவெல்லாம் நடத்தல் கண்ட
இருகரை மரங்கள், தோல்வி
வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி
மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி!உழவர் முயற்சி
ஆற்றுவெள் ளத்தைக் காணச்
சிற்றூரார் அங்கு வந்தார்!
போற்றினார் புதுவெள்ளத்தைப்!
புகன்றனர் வாழ்த்து ரைகள்!
காற்றாகப் பறந்து சென்று
கழனிகள் மடைதி றந்து
மாற்றினார் வாய்க்கால்! மற்றும்
வடிகாலை மறித்தார் நன்றே!ஆற்று நடை
நோய்தீர்ந்தார்! வறுமை தீர்த்தார்,
நூற்றுக்கு நூறு பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை துக்கி
உழவுப்பண் பாட லானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய்நடக் கின்றாள் வையம்
தழைகவே தழைக என்றே!
———7. செந்தாமரை
நீர், இலை, நீர்த்துளிகள்
கண்ணாடித் தரையின் மீது
கண்கவர் பச்சைத் தட்டில்
எண்ணாத ஒளிமுத்துக்கள்
இறைந்தது போல்கு ளத்துத்
தண்ணீரி லேப டர்ந்த
தாமரை இலையும், மேலே
தெண்ணீரின் துளியும் கண்டேன்
உவப்போடு வீடு சேர்ந்தேன்.தாமரையின் சிற்றரும்பு
சிலநாட்கள் சென்ற பின்னர்க்
குளக்கரை சென்றேன்! பச்சை
இலத்தட்டில் சிந்தும் பால்போல்
எழில்நீரும், கரிய பாம்பின்
தலைகள்போல் நிமிர்ந் திருந்த
தாமரைச் சிற்ற ரும்பும்
இலகுதல் காணப் பெற்றேன்;
காட்சியின் இன்பம் பெற்றேன்.முதிர் அரும்பு
மணிஇருள் அடர்ந்த வீட்டில்
மங்கைமார், செங்கை ஏந்தி,
அணிசெய்த நல்வி ளக்கின்
அழகிய பிழம்பு போலத்
தணிஇலைப் பரப்பி னிற்செந்
தாமரைச் செவ்வ ரும்பு
பிணிபோக்கி என்வி ழிக்குப்
படைத்தது பெருவி ருந்தே!அவிழ் அரும்பு
விரிகின்ற பச்சைப் பட்டை
மேனிபோர்த் துக் கிடந்து
வரிக்கின்ற பெண்கள், வான
வீதியைப் பார்த்துப் பார்த்துச்
சிரிக்கின்ற இதழ்க்கூட் டத்தால்
மாணிக்கம் சிதறு தல்போல்
இருக்கும்அப் பச்சி லைமேல்
அரும்புகள் இதழ்வி ரிக்கும்!மலர்களின் தோற்றம்
விண்போன்ற வெள்ளக் காடு,
மேலெலாம் ஒளிசெய் கின்ற
வெண்முத்தங் கள்கொழிக்கும்
பச்சிலைக் காடு, மேலே
மண்ணுளார் மகிழும் செந்தா
மரைமலர்க் காடு, நெஞ்சைக்
கண்ணுளே வைக்கச் சொல்லிக்
கவிதையைக் காணச் சொல்லும்.ஒப்பு
வாய்போலச் சிலம லர்கள்!
‘வா’ என்றே அழைக்கும் கைபோல்
தூயவை சிலம லர்கள்!
தோய்ந்துநீ ராடி மேலே
பாயும்நன் முகம்போல் நெஞ்சைப்
பறிப்பன சிலம லர்கள்!
ஆயிரம் பெண்கள் நீரில்
ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்!செவ்விதழ்
ஓரிதழ் குழந்தை கன்னம்!
ஓரிதழ் விழியை ஒக்கும்!
ஓரிதழ் தன்ம ணாளன்
உருவினைக் கண்டு கண்டு
பூரிக்கும் உதடு! மற்றும்
ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்!
வாரித் தரச்சி வந்த
உள்ளங்கை யாம் மற்றொன்று!தேன்
மூடிய வாய்தி றந்து
உளமார முன்னா ளெல்லாம்
தேடிய தமிழு ணர்வைத்
தின்னவே பலர்க்கும் தந்தும்
வாடாத புலவர் போலே
அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்
வாடாது தேன்கொ டுக்கும்
வண்டுகள் அதைக் குடிக்கும்!வண்டுகள்
தேனுண்ண, வண்டு பாடும்!
தேனுண்டபின், ஓர் கூட்டம்
தானோர்பால் தாவும்! வேறோர்
தனிக்கூட்டம் களியாட்டத்தை
வானிடை நடத்தும்! ஒன்று
மலர் என்னும் கட்டி லுண்டு
நானுண்டென் றுறக்கம் கொள்ளும்
நறும்பொடி இறைக்கும் ஒன்று.பாட்டு, மணம்
என்னைநான் இழந்தேன்; இன்ப
உலகத்தில் வாழ லுற்றேன்
பொன்துகள், தென்றற் காற்றுப்,
புதுமணம், வண்டின் பாட்டுப்,
பன்னூறு செழுமா ணிக்கப்
பறவைபோல் கூட்டப் பூக்கள்
இன்றெலாம் பார்த்திட் டாலும்
தெவிட்டாத எழிலின் கூத்தே!
————–8. ஞாயிறு
எழுந்த ஞாயிறு
ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்
தொருபொருள், வாராய்! நெஞ்சக்
களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்
கனற் பொரு ளே, ஆழ் நீரில்
வெளிப்பட எழுந்தாய்; ஓகோ
விண்ணெலாம் பொன்னை அள்ளித்
தெளிக்கின்றாய் ; கடலிற் பொங்கும்
திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய்.வையத்தின் உணர்ச்சி
எழுந்தன உயிரின் கூட்டம்!
இருள் இல்லை அயர்வும் இல்ல!
எழுந்தன ஒளியே, எங்கும்!
எங்கணும் உணர்ச்சி வெள்ளம்
பொழிந்தநின் கதிர் ஒவ் வொன்றும்
பொலிந் தேறி, மேற்றி சைமேல்
கொழுந்தோடக் கோடி வண்ணம்
கொழித்தது சுடர்க்கோ மானே!காட்சி ஞாயிறு
பொங்கியும் பொலிந்தும் நீண்ட
புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி
திகு திகு என எரிக்கும்
மங்காத தணற்பி ழம்பே!
மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத்
தகளியிற் பெருவிளக்கே!ஒளிசெய்யும் பரிதி
கடலிலே கோடி கோடிக்
கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
நெடுவானில் கோடி கோடி
நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ
இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளவா
அமைந்தனை! பரிதி வாழி!கதிரும் இருளும்
என்னகாண் புதுமை! தங்க
இழையுடன் நூலை வைத்துப்
பின்னிய ஆடை, காற்றில்
பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
நன்னீரில் கதிர் கலந்து
நளிர் கடல் நெளிதல் கண்டேன்;
உன் கதிர், இருட்ப லாவை
உரித் தொளிச் சுளையூட் டிற்றே!கரைபோக்கி எழில் செய்தாய்
இலகிய பனியின் முத்தை
இளங்கதிர்க் கையால் உண்பாய்!
அலை அலையாய் உமிழ்வாய்
அழகின், ஒலியை யெல்லாம்!
இலை தொறும் ஈரம் காத்த
கரை போக்கி இயல்பு காப்பாய்!
மலையெல்லாம் சோலை யெல்லாம்
நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்;எங்கும் அது
தாமரை அரும்பி லெல்லாம்
சரித்தனை இதழ்கள் தம்மை!
மாமரத் தளிர்அ சைவில்
மணிப்பச்சை குலுங்கச் செய்தாய்!
ஆமாமாம் சேவற் கொண்டை
அதிலும் உன் அழகே காண்பேன்!
நீமன்னன்; ஒளியின் செல்வன்;
நிறை மக்கள் வாழ்த்தும் வெய்யோன்.பரிதியும் செயலும்
இறகினில் உயிரை வைத்தாய்
எழுந்தன புட்கள்! மாதர்
அறஞ்செய்யும் திறஞ்செய் திட்டாய்!
ஆடவர் குன்றத் தோளில்
உறைகின்றாய்! கன்று காலி
உயிர் பெறச் செய்கின் றாய்நீ!
மறத் தமிழ் மக்கள் வாழ்வில்
இன்பத்தை வைத்தாய் நீயே.பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை
வாழும் நின் ஒளிதான் இன்றேல்
வானிலே உடுக்கள் எல்லாம்
தாழங்காய், கடுக்காய் கள்போல்
தழைவின்றி அழகி ழக்கும்!
பாழ் என்ற நிலையில் வாழ்வைப்
பயிரிட்ட உழவன் நீ ; பைங்
கூழுக்கு வேரும் நீயே!
குளிருக்குப் போர்வை நீயே!ஞாயிறு வாழி
விழிப் பார்வை தடுத்து வீழ
விரிகின்ற ஒளியே, சோர்வை
ஒளிக்கின்ற உணர்வே, வையத்
திருளினை ஒதுக்கித் தள்ளித்
தழற் பெரு வெள்ளந் தன்னைச்
சாய்ப் போயே, வெயிலில் ஆடித்
தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத்
தனிச்சொத்தோ வாழி நன்றே.
————–9. வான்
விண்மீன் நிறைந்த வான்
மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்; இதைத் தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
விரிவானம் பாராய் தம்பி!நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை
பாற்புகை முகிலைச் சீய்த்துப்
பளிச்சென்று “திங்கட் சேவல்”
நாற்றிக்கும் குரல் எடுத்து
நல்லொளி பாய்ச்சிப் பெட்டை
ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்
பொடிவிண்மீன் குஞ்சு கட்கும்
மேற்பார்வை செலுத்திப் “பூனை
இருட்டையும்” வெளுத்துத் தள்ளும்.பகல் வானில் முகிலோவியங்கள்
பகல்வானிற் கதிரின் வீச்சுப்
பரந்தது! முகிலி னங்கள்
வகைவகை ஓவி யங்கள்
வழங்கின; யானைக் கூட்டம் !
தகதக எனும்மா ணிக்க
அருவிகள் ! நீலச் சாரல் !
புகைக்கூட்டம் ! எரிம லைகள்!
பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை !இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்
கிழக்குப்பெண் விட்டெ றிந்த
கிளிச்சிறைப் பரிதிப் பந்து,
செழித்தமேற் றிசைவா னத்தின்
செம்பருத் திப்பூங் காவில்
விழுந்தது ! விரிவிளக்கின்
கொழுந்தினால் மங்கை மார்கள்
இழந்ததைத் தேடிக் கொள்ள
இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் !காலை வானம்
கோழிகூ விற்று ! வையம்,
கொண்டதோர் இருளைத் தங்க
மேழியால் உழுதான் அந்த
விரிகதிர்ச் செல்வன் ; பின்னர்
ஆழிசூழ் உலகின் காட்சி
அரும்பிற்று ! முனைய விழ்ந்து
வாழிய வைய மென்று
மலர்ந்தது காலை வானம் !வானவில்
அதிர்ந்தது காற்று! நீளப்
பூங்கிளை அசைந்தா டிற்று!
முதிர்ந்திட்ட முகிலின் சேறு
மூடிற்றுச் ! சேற்றுக் குள்ளே
புதைந்திட்ட கதிரிற் பூத்த
புதுப்புது வண்ண மெல்லாம்
ததம்பிற்றே வான வில்லாய்ப் !
பாரடி அழகின் தன்மை !மழை வான்
பகல்வான்மேல் கருமு கில்கள்
படையெடுத் தன ! வில்லோடு
துகளற்ற வாளும், வேலும்
சுழன்றன மின்னி மின்னி !
நகைத்தது கலகல வென்று
நல்ல கார்முகில்தான் ! வெற்றி
அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள்
இறைத்தாள்பூ மழையை அள்ளி !எரிகின்ற வானம்
தேன்செய்யும் மலரும் தீயும் !
செந்தீயும் நீறாய்ப் போகும் !
கான், செய், ஊர், மலை, கா, ஆறு
கடலெல்லாம் எரிவ தோடு
தான்செய்த தணலில் தானும்
எரிகின்றான் பகலோன்! அங்கு
வான்செய்த வெப்பத் தால்இவ்
வையத்தின் அடியும் வேகும் !உச்சிப் போதுக்கும் மாலப் போதுக்கும் இடை நேரம்
உச்சியில் இருந்த வெய்யோன்,
ஓரடி மேற்கில் வைத்தான்,
நொச்சியின் நிழல்கி ழக்கில்
சாய்ந்தது ! நுரையும், நீரும்,
பச்சையும், பழுப்பு மான
பலவண்ண முகில்கள் கூடிப்
பொய்ச்சான்று போல, யானை
புகழும்; பின் மலையைக் காட்டும்.வான் தந்த பாடம்
எத்தனை பெரிய வானம் !
எண்ணிப்பார் உனையும் நீயே ;
இத்தரை, கொய்யாப் பிஞ்சு;
நீஅதில் சிற்றெ றும்பே
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித் தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே!
————10. ஆல்
அடி, கிளை, காய், இலை, நிழல்
ஆயிரம் கிளைகள் கொண்ட
அடிமரம் பெரிய யானை!
போயின மிலார்கள் வானில் !
பொலிந்தன பவளக் காய்கள் !
காயினை நிழலாற் காக்கும்
இலையெலாம், உள்ளங் கைகள் !
ஆயஊர் அடங்கும் நீழல்,
ஆலிடைக் காண லாகும் !விழுதும் வேரும்
தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர் ! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம் !
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல் !பச்சிலை, இளவிழுது
மேற்கிளை யின்வீழ் தெல்லாம்
மின்னிடும் பொன்னிழைகள் !
வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்!
அருவியின் வீழ்ச்சி போலத்
தோற்றஞ்செய் வனவும் உண்டு!
சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
ஏற்பட்ட தென்றால், வீழ்தோ
எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.அடிமரச் சார்பு
அடிமரப் பதிவி லெல்லாம்
அடங்கிடும் காட்டுப் பூனை!
இடையிடை ஏற்பட் டுள்ள
பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்
படைப்பாம்பின் பெருமூச்சுக்கள் !
பளிங்குக்கண் ஆந்தைச் சீறல் !
தடதடப் பறவைக் கூட்டம் !
தரையெலாம் சருகின் மெத்தை !வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து
தொலைவுள்ள கிளையில் வெளவால்
தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
குலைப்பழம், கிளை, கொ டுக்கும் ;
கோதுகள் மழையாய்ச் சிந்தும் !
தலைக்கொழுப் புக்கு ரங்கு
சாட்டைக்கோல் ஒடிக்கும் ; பின்னால்
இலைச்சந்தில் குரங்கின் வாலை
எலியென்று பருந்தி ழுக்கும் !கிளிகள்
கொத்தான பழக்கு லைக்குக்
குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை
தொத்துங்கால் தவறி, அங்கே
துடிக்குந்தன் பெட்டை யண்டைப்
பொத்தென்று வீழும் ; அன்பிற்
பிணைந்திடும் ; அருகில் உள்ள
தித்திக்கும் பழங்கள் அக்கால்
ஆணுக்குக் கசப்பைச் செய்யும் !சிட்டுக்கள்
வானத்துக் குமிழ்ப றந்து
வையத்தில் வீழ்வ தைப்போல்
தானம்பா டும்சிட் டுக்கள்
தழைகிளை மீது வீழ்ந்து,
பூனைக்கண் போல்ஒ ளிக்கும் ;
புழுக்களைத் தின்று தின்று
தேனிறை முல்லைக் காம்பின்
சிற்றடி தத்திப் பாடும்.குரங்கின் அச்சம்
கிளையினிற் பாம்பு தொங்க,
விழுதென்று, குரங்கு தொட்டு
“விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்”
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.பறவை யூஞ்சல்
ஆலினைக் காற்று மோதும் ;
அசைவேனோ எனச்சி ரித்துக்
கோலத்துக் கிளைகு லுங்க
அடிமரக் குன்று நிற்கும் !
தாலாட்ட ஆளில் லாமல்
தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்
கால்வைத்த கிளைகள் ஆடக்
காற்றுக்கு நன்றி கூறும் !குயில் விருந்து
மழைமுகில் மின்னுக் கஞ்சி
மாங்குயில் பறந்து வந்து
“வழங்குக குடிசை” என்று
வாய்விட்டு வண்ணம் பாடக்
கொழுங்கிளைத் தோள் உயர்த்திக்
குளுரிலைக் கைய மர்த்திப்
பழந்தந்து களிப்பாக் கும்பின்
பசுந்துளிர் வழங்கும் ஆலே.
————11. புறாக்கள்
கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு
வீட்டுக்கு வெளிப் புறத்தில்
வேலன்வந் தேபு றாவின்
கூட்டினைத் திறக்கு முன்பு
“குடுகுடு” எனக்கு தித்தல்
கேட்டது காதில் ! கூட்டைத்
திறந்ததும் கீழ்ச் சரிந்த
கோட்டுப்பூப் போற்பு றாக்கள்
குதித்தன கூட்டி னின்றே !புறாக்களின் பன்னிறம்
இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும் ! செவ் விதழ்கள்
விரியாத தாமரை போல்
ஓர்இணை ! மெல்லி யர்கள்
கருங்கொண்டை ! கட்டி ஈயம்
காயாம்பூக் கொத்து ! மேலும்,
ஒருபக்கம் இருவா ழைப்பூ !
உயிருள்ள அழகின் மேய்ச்சல் !புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு
இட்டதோர் தாமரைப் பூ
இதழ்விரிந் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும் ; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்து மில்லை;
வேறுவே றிருந்த ருந்தும்
கட்டில்லை ; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்க மில்லை.நடை அழகு
அகன் றவாய்ச் சட்டி ஒன்றின்
விளிம்பினில் அடிபொருந்தப்
புகும்தலை ; நீர்வாய் மொண்டு
நிமிர்ந்திடும் ; பொன் இமைகள்
நகும்;மணிவிழிநாற் பாங்கும்
நாட்டிடும்; கீழ்இ றங்கி
மகிழ்ச்சியாய் உலவி, வைய
மன்னர்க்கு நடை கற்பிக்கும்!புறாவின் ஒழுக்கம்
ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக் குடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப் பைப்போல்
ஒளிபுரிந் திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்!புறாக்களுக்கு மனிதர் பாடம்
அவள்தனி; ஒப்ப வில்லை;
அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக் கின்றான். இந்தத்
தகாச்செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில்
ஒரு சில தருதலைகள்,
கவலைசேர் மக்க ளின்பால்
கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!புறாக்கள் காதல்
தலைதாழ்த்திக் குடுகு டென்று
தனைச் சுற்றும் ஆண்புறாவைக்
கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ
குறுக்கிற் சென்றே திரும்பித்
தலநாட்டித், தரையைக் காட்டி,
“இங்குவா” என அழைக்கும்;
மலைகாட்டி அழைத்தா லுந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்?தாயன்பு தந்தையன்பு
தாய் இரை தின்ற பின்பு
தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும்; குஞ்சு
தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
தாய்அருந் தியதைக் கக்கித்
தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!
அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!மயிற்புறா ஆடல்
மயில்புறா, படம் விரிக்கும்;
மார்பினை முன் உயர்த்தும்;
நயப்புறு கழுத்தை வாங்கி
நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும் ஆடல் நூலின்
படி, தூக்கி அடைவு போடும்;
மயிற்புறா வெண்சங் கொக்கும்;
வால் தந்த விசிறி ஒக்கும் !அடைபடும் புறாக்கள்
கூட்டமாய்ப் பறந்து போகும்,
சுழற்றிய கூர்வாள் போலே!
கூட்டினில் அடையும் வந்தே
கொத்தடி மைகள் போலே!
கூட்டினை வேலன் வந்து
சாத்தினான், குழைத்து வண்ணம்
தீட்டிய ஒவியத்தைத்
திரையிட்டு மறைத்தல் போலே!
——–12. கிளி
முக்கு, கண், வால், பசுமை
இலவின்காய் போலும் செக்கச்
செவேலென இருக்கும் மூக்கும்,
இலகிடு மணல் தக்காளி
எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,
நிலைஒளி தழுவும் மாவின்
நெட்டிலை வாலும், கொண்டாய்,
பலர்புகழ் கின்ற பச்சைப்
பசுங்கிளி வாராய் ! வாராய் !கழுத்து வரி, சொக்குப் பச்சை
நீலவான் தன்னைச் சுற்றும்,
நெடிதான வான வில்லைப்
போலநின் கழுத்தில் ஓடும்
பொன்வரி மின் விரிக்கும்!
ஆல், அல ரிக்கொ ழுந்தில்
அல்லியின் இலையில் உன்றன்
மேலுள சொக்குப் பச்சை
மேனிபோல் சிறிது மில்லை!அழகுச் சரக்கு
கொள்ளாத பொருள்க ளோடும்,
அழகினிற் சிறிது கூட்டிக்
கொள்ளவே செயும் இயற்கை,
தான்கொண்ட கொள்கை மீறித்
தன்னரும் கை யிருப்பாம்
அழகெனும் தலைச் சரக்கைக்
கிள்ளியமைத் திட்ட கிள்ளாய்
கிட்டவா சும்மா வாநீ!சொன்னதைச் சொல்லும்
இளித்தவா யர்கள், மற்றும்
ஏமாற்றுக் காரர் கூடி
விளைத்திடும் தொல்லை வாழ்வில்,
மேலோடு நடக்க எண்ணி
உளப்பாங்க றிந்து மக்கள்
உரைத்ததை உரைத்த வண்ணம்
கிளத்திடும் கிளியே என்சொல்
கேட்டுப்போ பறந்து வாராய் !ஏற்றிய விளக்கு
கிளிச்செல்வ மேநீ அங்குக்
கிடந்திட்ட பச்சிலை மேல்
பளிச்சென எரியும் கோவைப்
பழத்தில்உன் முக்கை ஊன்றி
விளக்கினில் விளக்கை ஏற்றிச்
செல்லல்போல் சென்றாய் ! ஆலின்
கிளைக்கிடை இலையும், காயும்
கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!நிறைந்த ஆட்சி
தென்னைதான் ஊஞ்சல் ! விண்தான்
திருவுலா வீதி ! வாரித்
தின்னத்தான் பழம், கொட் டைகள்!
திருநாடு வையம் போலும்!
புன்னைக்காய்த் தலையில் செம்மைப்
புதுமுடி புனைந்தி ருப்பாய்!
உன்னைத்தான் காணு கின்றேன்
கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!இருவகைப் பேச்சு
காட்டினில் திரியும் போது
கிரீச்சென்று கழறு கின்றாய்;
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணீர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!மக்களை மகிழ்விக்கும்
கொஞ்சுவாய் அழகு தன்னைக்
கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
வஞ்சியர் தமையும், மற்ற
வறியவர் தமையும், ஒக்க
நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
நிரப்புவாய், அவர் அளிக்கும்
நைந்தநற் பழத்தை உண்பாய்;
கூழேனும் நன்றே என்பாய்!கிளிக்குள்ள பெருமை
உனக்கிந்த உலகில் உள்ள
பெருமையை உணர்த்து கின்றேன்;
தினைக்கொல்லைக் குறவன் உன்னைச்
சிறைகொண்டு நாட்டில் வந்து,
மனைதோறும், சென்றே உன்றன்
அழகினை எதிரில் வைப்பான்;
தனக்கான பொருளைச் செல்வர்
தமிழ்க்கீதல் போல ஈவார்!ஓவியர்க் குதவி
பாவலர் எல்லாம் நாளும்
பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்
காவியம் செய்வார் நாளும்
கண் கைகள் கருத்தும் நோக!
ஓவியப் புலவ ரெல்லாம்
உநைப்போல எழுதி விட்டால்
தேவைக்குப் பணம் கிடைக்கும்
கீர்த்தியும் கிடைக்கும் நன்றே!
————-13. இருள்
வாடிய உயிர்கள அணைப்பாய்
ஆடிஓ டிப்போய் இட்டும்,
அருந்துதல் அருந்தி யும், பின்
வாடியே இருக்கும் வைய
மக்களை, உயிர்க்கூட் டத்தை,
ஓடியே அணைப்பாய் உன்றன்
மணிநீலச் சிறகளாவ
மூடுவாய் இருளே, அன்பின்
முழக்கமே, உனக்கு நன்றி!இருளின் பகலாடை இரவாடை
விண்முதல் மண் வரைக்கும்
வியக்கும்உன் மேனி தன்னைக்
கண்ணிலே காண்பேன்; நீயோ
அடிக்கடி உடையில் மாற்றம்
பண்ணுவாய் இருளே, உன்றன்
பகல்உடை தங்கச் சேலை!
வெண்பட்டில் இராச் சேலைமேல்
வேலைப்பா டென்ன சொல்வேன்!இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு
‘எங்குச் செல் கின்றாய்’ என்று
பரிதியை ஒரு நாள் கேட்டேன்;
‘கங்குலை ஒழிக்க’ என்றான்.
கடிதுசெல் தம்பி என்றேன்.
அங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ
அகல்வதாய் நினைத்தான்; என்னே!
எங்கணும் நிறைந்த நீர் நீ!
அதில், ‘கதிர்’, சுழல்வண் டன்றோ! நீநீ முத்துடை போர்த்து நின்றாய்
கள்ளரை வெளிப் படுத்தும்
இருட்பெண்ணே, கதை ஒன்றைக் கேள் ;
பிள்ளைகள் தூங்கினார்கள் ;
பெண்டாட்டி அருகில் நின்றாள் ;
உள்ளமோ எதிலும் ஒட்டா
திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ
வெள்ளைமுத் துக்கள் தைத்த
போர்வையை மேனி போர்த்தே.கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ
மண்முதல் விண் வரைக்கும்
வளர்ந்தஉன் உடல் திருப்பிக்
கண்மலர் திருப்பி நின்றாய்!
பின்புறம் கரிய கூந்தற்
கொண்டையில் ஒளியைக் காட்டும்
குளிர்நிலா வயிர வில்லை
கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்
மனைவியின் திருமுன் செல்லும்!பிறப்பும் இறப்பும்
வானொடு நீபி றந்தாய்!
மறுபடி, கடலில் தோன்றும்
மீன் என உயிர் உடல்கள்
விளைந்தன! எவ்வி டத்தும்
நீநிறை வுற்றாய்! எங்கும்,
பொருளுண்டேல் நிழலுண் டன்றோ!
பானையில் இருப்பாய் ; பாலின்
அணுத்தோறும் பரந்தி ருப்பாய்!உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்
உயர்ந்துள்ள அழகு மூக்கின்
இருபுறம் உறைவாய் ; மங்கை
கயல்விழிக் கடையில் உள்ளாய்;
காதினில் நடுப்பு றத்தும்,
அயலிலும், சூல்வாய் பெண்ணின்
முகத்தினில் அடையா ளத்தை
இயக்குவாய் இருளே, உன்சீர்,
ஓவியர் அறிந்தி ருப்பார் !இருளே அழகின் வேர்
அடுக்கிதழ்த் தாமரைப் பூ
இதழ்தோறும் அடிப்பு றத்தில்
படுத்திருப் பாய்நீ ! பூவின்
பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்
தப்புக்காட் டுகின்றாய் ! இன்றேல்,
தாமரை அழகு சாகும் !
அடுத்திடும் இருளே, எங்கும்,
அனைத்துள்ளும் அழகு நீயே !அறியாமைதான் இருள்;
ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்!
அறியாமை இருளாம். ஆம்ஆம்!
அறியாமை அறிவைச் செய்யும்;
அறியாமை அறிவால் உண்டோ ?
சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;
நள்ளிருள் ; விளக்குத் தேவை;
நிறைவேற்ற நெருப்புக் குச்சி
தேடினார் ; கிடைக்க வில்லை.இருளின் பெருமை இயம்ப அரிது
பெட்டியில் இருப்ப தாகப்
பேசினார் ; சாவி இல்லை;
எட்டுப்பேர் இதற்குள் தேளால்
கொட்டப்பட் டுத்து டித்தார்;
“கட்டாயம் தூய்மை வேண்டும்”
என்னுமோர் அறிவு தன்னை
இட்டளித் திட்ட நல்ல
இருளே உன் பெருமை என்னே!
————–14. சிற்றூர்
நெடுஞ் சாலை எனை அழைத்து
நேராகச் சென்று, பின்னர்,
இடையிலோர் முடக்கைக் காட்டி
ஏகிற்று ! நானோ ஒற்றை
அடிப்பாதை கண்டேன், அங்கோர்
ஆலின்கீழ்க் காலி மேய்க்கும்
இடைப்பையன் இருந்தான்; என்னை
” எந்தஊர்” என்று கேட்டான்.புதுச்சேரி என்று சொல்லிப்
போம்வழி கேட்ன், பையன்
‘இதைத்தாண்டி அதோ இருக்கும்
பழஞ்சேரி இடத்தில் தள்ளி
ஒதிச் சாலையோடு சென்றே
ஓணான் பச்சேரி வாய்க்கால்
குதிச்சேறிப் போனால் ஊர்தான்
கூப்பிடு தொலைவே’ என்றான்!பனித்துளி மணிகள் காய்க்கும்
பசும்புற்கள் அடர் புலத்தில்,
தனித்தனிஅ கலா வண்ணம்
சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம்,
தனக்கொன்று பிறர்க்கொன் றெண்ணாத்
தன்மையால் புல்லை மேயும்!
இனித்திடப் பாடும் பையன்
தாளம்போல் இச்இச் சென்றான்.மந்தையின் வெளி அடுத்து
வரிசையாய் இருபக் கத்தில்,
கொந்திடும் அணிலின் வால்போல்
குலைமுத்துச் சோளக் கொல்லை,
சந்திலாச் சதுரக் கள்ளி,
வேலிக்குள் தழைந்தி ருக்கும்;
வெந்தயச் செடிக ளின்மேல்
மின்னிடும் தங்கப் பூக்கள்!முற்றிய குலைப்ப ழத்தை
முதுகினிற் சுமந்து நின்று
‘வற்றிய மக்காள் வாரீர்’
என்றது வாழைத் தோட்டம்;
சிற்றோடு கையில் ஏந்தி
ஒருகாணிப் பருத்தி தேற்ற
ஒற்றைஆள் நீர்இ றைத்தான்,
உழைப்பொன்றே செல்வம் என்பான்.குட்டையில் தவளை ஒன்று
குதித்தது, பாம்பின் வாயிற்
பட்டதால் அது விழுங்கிக்
கரையினிற் புரளப் பார்த்த
பெட்டைப் பருந்து துக்கிப்
பெருங்கிளை தன்னிற் குந்தச்
சிட்டுக்கள் ஆலி னின்று
திடுக்கிட்டு மேற்ப றக்கும்!இளையவள் முதிய வள்போல்
இருந்தனள் ஒருத்தி; என்னை
வளைத்தனள், ‘கோழி முட்டை
வாங்கவா வந்தீர்?’ என்றாள்.
விளையாட்டாய்ச் ‘சேரி முட்டை
வேகாதே!’ என்றேன். கேட்டுப்
புளித்தனள்; எனினும் என்சொல்,
‘பொய்’ என்று மறுக்கவில்லை!” என்றேனும் முட்டை உண்ட
துண்டோ நீ” என்று கேட்டேன்.
“ஒன்றேனும் உண்ட தில்லை;
ஒருநாளும் உண்ட தில்லை;
தின்றேனேல் புளித்த கூழில்
சேர்ந்திடும் உப்புக் கான
ஒன்றரைக் காசுக் கென்றன்
உயிர்விற்றால் ஒப்பார்” என்றாள்.சேரிக்குப் பெரிது சிற்றுர்,
தென்ன மா சூழ்ந்திருக்கும்;
தேர்ஒன்று, கோயில் ஒன்று
சேர்ந்த ஒர் வீதி, ஓட்டுக்
கூரைகள், கூண்டு வண்டி
கொட்டில்சேர் வீதி ஐந்தே;
ஊர் இது; நாட்டார்க்கெல்லாம்
உயிர்தரும் உணவின் ஊற்று.நன்செய்யைச் சுற்றும் வாய்க்கால்
நல்லாற்று நீரை வாங்கிப்
பொன்செயும் உழவு செய்வோன்,
‘பொழுதெலாம் உழவு செய்தேன்
என்செய்தாய்’ என்ற பாட்டை
எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி
‘முன்செய்த கூழுக் கத்தான்
முடக்கத்தான் துவையல்’ என்றாள்.
———-
15. பட்டணம்எத்தனை வகைத் தெருக்கள்!
என்னென்ன வகை இல்லங்கள்!
ஒத்திடும் சுண்ண வேலை
உயர் மரவேலை செய்யும்
அத்திறம் வேறே; மற்றும்
அவரவர்க் கமைந்த தான
கைத்திறம் வேறே என்று
காட்டின கட்டிடங்கள்.இயற்கையின் உயிர்கட் குள்ளே
மனிதன்தான் எவற்றி னுக்கும்
உயர்ச்சியும், தான் அறிந்த
உண்மையை உலகுக் காக்கும்
முயற்சியும், இடைவி டாமல்
முன்னேற்றச் செயலைச் செய்யும்
பயிற்சியும் உடையான் என்று
பட்டணம் எடுத்துக் காட்டும்.நடுவினிற் புகையின் வண்டி
ஓடிடும் நடைப் பாதைக்குள்
இடைவிடா தோடும் ‘தம்மில்
இயங்கிடும் ஊர்தி’ யெல்லாம்
கடலோரம் கப்பல் வந்து
கணக்கற்ற பொருள் குவிக்கும்
படைமக்கள் சிட்டுப் போலப்
பறப்பார்கள் பயனை நாடி!வாணிகப் பண்டக சாலை
வைத்துள்ள பொருள்கள் தாமும்,
காண் எனக் காட்டி விற்கும்
அங்காடிப் பொருள்கள் தாமும்,
வீணாளைப் பயன் படுத்தும்
வியன்காட்சிப் பொருள்கள் தாமும்,
காணுங்கால் மனிதர் பெற்ற
கலைத்திறம் காணச் செய்யும்.உள்ளத்தை ஏட்டால் தீட்டி
உலகத்தில் புதுமை சேர்க்கும்
கொள்கைசேர் நிலைய மெல்லாம்
அறிஞரின் கூட்டம் கண்டேன்;
கொள்கைஒன் றிருக்க வேறு
கொள்கைக்கே அடிமை யாகும்
வெள்ளுடை எழுத்தா ளர்கள்
வெறுப்புறும் செயலும் கண்டேன்.உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும்
உயர்வழக் கறிஞர் தம்மை
விண்வரை வளர்ந்த நீதி
மன்றத்தில் விளங்கக் கண்டேன்;
புண்பட்ட பெருமக் கட்குப்
பொதுநலம் தேடு கின்ற
திண்மைசேர் மன்றிற் சென்றேன்
அவரையே அங்கும் கண்டேன்.மாலைப்போ தென்னும் அன்னை,
உழைப்பினால் மடிவார் தம்மைச்
சாலிலே சாரா யத்தால்
தாலாட்டும் கடையின் உள்ளே
காலத்தைக் களியாற் போக்கக்
கருதுவோர் இருக்கக் கண்டேன்,
மாலையில் கோழி முட்டை
மரக்கறி ஆதல் கண்டேன்.இயற்கையின் எழிலை யெல்லாம்
சிற்றூரில் காண ஏலும்!
செயற்கையின் அழகை யெல்லாம்
பட்டணம் தெரியக் காட்டும்!
முயற்சியும் முழுது ழைப்பும்
சிற்றூரில் காணுகி ன்றேன்;
பயிற்சியும் கலையு ணர்வும்
பட்டணத் திற்பார்க் கின்றேன்!வருநாளின் நாடு காக்க
வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம்,
திருநாளின் கூட்ட மாகத்
தெருஓரம் சுவடி யோடு,
பெருநாளைப் பயன்நா ளாக்கும்
பெரும்பெருங் கழகம் நோக்கி
ஒருநாளும் தவறிடாமல்
வரிசையாய் உவக்கச் செல்வார்!கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
கவிதையில் ஒளிமி குந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு போதல் கண்டேன்
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!
———-16. தமிழ்
முதலில் உண்டானது தமிழ்
புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே “புதிய நாளை”
மனிதப்பைங் கூழ்மு ளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற் றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?இசை கூத்தின் முளை
பழந்தமிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு, வண்டு,
தழைமுங்கில் இசைத்ததைத், தாம்
தழுவியே இசைத்த தாலே
எழும்இசைத் தமிழே! இன்பம்
எய்தியே குதித்த தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்துத்
தமிழே! என் வியப்பின் வைப்பே!இயற்றமிழ் எழல்
அம்மா என் றழைத்தல், காகா
எனச்சொல்லல், அஃகென் றொன்றைச்
செம்மையிற் சுட்டல் என்னும்
இயற்கையின் செறிவி னாலே
இம்மா நிலத்தை ஆண்ட
இயற்றமி ழேஎன் அன்பே!
சும்மாதான் சொன்னார் உன்னை
ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே!தமிழர்க்குத் தமிழ் உயிர்
வளர்பிறை போல் வளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்,
உளத்தையும், உலகில் ஆர்ந்த
வளத்தையும் எழுத்துச் சொல்லால்,
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்,
வீறுகொள் இசை யடைந்தும்,
அளவிலா உவகை அடற்
றமிழேநீ என்றன் ஆவி!சாகாத்தமிழ்
படுப்பினும் பாடது, தீயர்
பன்னாரும் முன்னேற் றத்தைத்
தடுப்பினும், தமிழர் தங்கள்
தலைமுறை தலைமு றைவந்
தடுக்கின்ற தமிழே! பின்னர்
அகத்தியர் காப்பி யர்கள்
கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்
கிளைதொத்தும் கிளியே வாழி!கலைகள் தந்த தமிழ்
இசையினைக் காணு கின்றேன்;
எண்நுட்பம் காணு கின்றேன்;
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க் கின்றேன்; ஓவியங்கள்,
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண் கின்றேன்.முன்னூலில் அயலார் நஞ்சம்
பன்னூறு நூற்றாண் டாகப்
பழந்தமிழ் மலையின் ஊற்றாய்
மன்னரின் காப்பி னாலே,
வழிவழி வழாது வந்த
அன்னவை காணு கின்றேன்.
ஆயினும் அவற்றைத் தந்த
முன்னூலை, அயலான, நஞ்சால்
முறித்ததும் காணு கின்றேன்!பகைக்கஞ்சாத் தமிழ்
வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப், பின் தெற்கில் வந்தே
இடக்கினச் செயநினைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே
“அடக்கடா” என்று ரைத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென் றாலும்
தடந்தோளுண் டெனச் சிரித்தாய்!வெற்றித் தமிழ்
ஆளுவோர்க் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர்;
தமிழேநீ நடுங்க வில்லை!
“வாளினை எடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள்” என்றாய்; காதில்
கடல்முழக் கத்தைக் கேட்பாய்!படைத் தமிழ்
இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக்குன்றை நான்
ஒருவனே மிதிப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நான் அங்கோர் மறவன்! கன்னற்
பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு; நானோர் தும்பி!அழகின் சிரிப்பு – பாடல்கள் தொகுப்பு முற்றிற்று