தற்போது கல் உப்பு, பொடி உப்பு, பாறையிலிருந்து எடுக்கப்படும் உப்பு, லைட் உப்பு, லோ லைட் உப்பு எனப் பல உப்புகள் வணிகத்தில் உள்ளன. அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சமையல்கட்டுகள் புலம்புகின்றன.
கடற்கரை உப்பளங்களில் ஆழ்துளை கிணறு போட்டு உப்புத்தண்ணீரை மேலேற்றித் தற்போது உப்பு எடுக்கப்படுகிறது. அந்த உப்பிலிருந்து மண்ணையும் கழிவுகளையும் நீக்கினால் அது கல் உப்பு ஆகிறது. ஆனால் அந்தக் கல் உப்பு ஒன்று கூடாமல் இருக்க சிலிகேட் என்கிற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கல் உப்பிலும் தற்போது அயோடின் கலந்து விற்கப்படுகிறது. இது இந்திய அரசின் ஆணை என்பதால் அயோடின் கலப்பு அனைத்து வகையானல் உப்புகளிலும் இருக்கும்.
பொடி உப்பு என்பது நன்கு அரைக்கப்பட்டு அயோடின் சேர்க்கப்பட்டு நமக்கு விற்கப்படுகிறது.
பாறையிலிருந்து எடுக்கப்படும் உப்பு ராக் உப்பு எனப்படுகிறது. அந்த உப்பில் மெக்னீசயமும் கால்சியமும் கூடுதலாக இருக்கிறது என்பதால் ராக் உப்பும் விற்கப்படுகிறது.
உப்பு என்றாலே சோடியம் குளோரைட் தான். இதில் சோடியம் என்பது நீரை உறிஞ்சும் தன்மையுடையது என்பதால் சோடியைத்தைக் குறைத்துப் பொட்டாசியம் சேர்க்கப்படும் உப்புகளே லைட் உப்பு என்றும், அதிகளவில் சோடியம் குறைக்கப்பட்டு அதிகளவில் பொட்டாசியம் சேர்க்கப்படும் உப்போ லோ லைட் உப்பு என விற்கப்படுகிறது.
சாதாரணமாக கல் உப்பும், பொடி உப்பும் அயோடின் கலந்து விற்கப்படுகிறது என்பதில் இதில் தெளிவாகிறது. லைட் உப்பு என்பது பொட்டாசியம் கலந்து விற்கப்படுவது. இந்தப் பொட்டாசியம் உடலில் அதிகம் சேர்வதும் கேடு தரும் என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எந்த உப்பைப் பயன்படுத்துவது என்று கேட்டால் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாக உப்பு கலக்கலாம். இல்லாவிட்டால் உடலில் உள்ள நீரை சோடியும் உறிஞ்சத் தொடங்கும். இதனால் இதய இரத்த நாளங்கள், மூளை இரத்த நாளங்கள், சிறுநீரக ரத்த நாளங்கள் நீர் வற்றிப் பாதிப்பைச் சந்திக்கலாம்.
எனவே எந்த உப்பைப் பயன்படுத்தினாலும் குறைந்தளவு பயன்படுத்துங்கள் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.