ஒரு கடிதத்தின் மதிப்பு 34.50 கோடிரூபாய்!
ஆம். ஒரு கடிதத்தின் மதிப்பு ரூ.34.50 கோடிக்கு வரும் செப்டம்பரில் ஏலம் போகலாம் என்று கிறிஸ்டியன் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.
அணுகுண்டு தொடர்பான அந்தக் கடிதமாக இருப்பதால் அதன் மதிப்பு இவ்வளவுக் கோடிகள் எனக் கணிக்கப்படுகிறது. இதன் பின்னணி என்பதை இனி அறியலாம்.
1939ம் ஆண்டில் ஒரு கடத்தல் திட்டம் அரங்கேற்றப்பட்டது. நார்வேயிலிருந்து கனநீரைக் கடத்தி ஜெர்மனிக்குக் கொண்டு செல்ல ஹிட்லர் திட்டமிட்டார். ஏனெனில் அந்தக் கனநீர் தயாரிப்புத் துணைத்திட்டமாக நார்வே நீர்மின்சாரத் திட்டம் வைத்திருந்தது.
இந்தக் கனநீரின் வேலை என்ன தெரியுமா?
ஒரு நியூட்ரான் பிளவுபட்டால் அது பல நியூட்ரான்களுடன் சேர்ந்து அணுகுண்டு உருவாக்க முடியும். ஆனால் பிளவுபட்ட நீயூட்ரானின் வேகத்தைக் கட்டுப்படுத்தி மற்ற நியூட்ரான்களால் உறிஞ்ச முடியாது. இதற்குத் தண்ணீருடன் (இரண்டு மடங்கு ஹைட்ரைஜன் ஒரு மடங்கு ஆக்சிஜன்) ஒரு நியூட்ரான் கொண்ட ஹைட்ரஜன் ஐசோடோப்பைப் பயன்படுத்தினால் நியூட்ரான் பிளவு வேகத்தைக் கட்டுப்படுத்தி அணுகுண்டுத் தயாரிக்க முடியும். எனவே இந்தக் கனநீரை நார்வேயிடம் ஜெர்மனி எதிர்பார்த்தது.
ஜெர்மனி அதற்கான விலையைக் கொடுக்க ஒப்புக்கொண்டது. ஆனால் பிரான்ஸ் காவல்துறை இதனால் ஏற்படும் விளைவுகளை நார்வேயிடம் சொன்னது. இதனால் நார்வே கட்டணமில்லாமல் கனநீரைப் பிரான்ஸ்க்குத் தர விரும்பியது.
26கனரக நீர் கேன்கள் இதற்காக பிரான்ஸ்க்கு விமானம் மூலம் கடத்தப்பட உள்ளதாக ஜெர்மனிக்குத் தகவல் கிடைத்தது. பிரான்ஸ் அதிகாரகள் பயணித்த விமானத்தை ஜெர்மனியர்கள் கட்டுப்படுத்தினார். ஆனால் அந்தக் கனநீர் யாவும் ஏற்கெனவே தொடர்வண்டிகள் மூலம் பிரான்ஸ்க்குச் சென்றுவிட்டன. இதனால் அணுகுண்டு தயாரிப்பதற்கான ஜெர்மனியின் செயல்திட்டம் முடங்கியது.
எனினும் ஜெர்மனி அணுக்குண்டைத் தயாரிப்பதற்கு முன் அமெரிக்கா தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் அலெக்சாண்டர் சாக்ஸ் அமெரிக்க அதிபர் ப்ராங்ளின் டி ரூஸ்வெல்ட்டைச் சந்தித்துப் பேசினார். இதற்கு அதிபர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அணுக்குண்டு குறித்த அறிவில் அமெரிக்க அதிபர் மங்கியிருந்தார்.
இந்நிலையில் இயல்பியல் அறிஞர் சிலார்ட் எப்படியாவது நாஜிக்களைக் கட்டுப்படுத்த அணுக்குண்டு தேவை என்பதை உணர்ந்திருந்தார். இதை அமெரிக்கதான் செய்ய முடியும் என உறுதியாக நம்பினார். எனவே ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். ஐன்ஸ்டீன் உருவாக்கிய E=mc² சமன்பாடு மூலம் அணுக்குண்டு உருவாக்க முடியும். நாஜிக்களை வீழ்த்த வேண்டுமானால் அமெரிக்கா அணுக்குண்டு தயாரிக்க உங்கள் சமன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக அமெரிக்க அதிபருக்குத் தான் எழுதியிருக்கும் கடிதத்தில் தாங்கள் கையெழுத்திட வேண்டும் என்றார்.
ஜெர்மனியால் நிகழும் போர்வெறியைக் கருத்தில்கொண்டு ஐன்ஸ்டீன் ஒப்புக்கொண்டு சிலார்ட் எழுதிய கடிதத்தில் கையொப்பமிட்டார்.
இந்தக் கடிதமே அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகே அவர் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மன்ஹாட்டன் திட்டத்தை உருவாக்கி அணுக்குண்டு தயாரிப்பதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கினார்.
ஆனால் பின்னாளில் ஜப்பான் மீதான அணுக்குண்டு வெடிப்பிற்குப் பிறகு அந்தக் கடிதம் எழுதியதற்காக ஐன்ஸ்டீன் வருத்தப்பட்டார். அறிவியல் கண்டுபிடிப்புகள் அழிவுக்காகப் பயன்படுத்துவதற்காக வருந்தினார்.
ஐன்ஸ்டீன் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த அந்தக் கடிதம் தான் வரும் செப்டம்பரில் ஏலத்திற்கு வரவுள்ளதாகத் தகவல் வருகின்றன. அந்தக் கடிதத்தின் மதிப்பு 34.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. ஆனால் அணுக்குண்டுகளால் விளையும் கேடுகள் இந்தப் பூமியை 34.5 மடங்குக்கும் மேலாகப் பலமுறை அழித்துவிடும்.
அணுஆயுதமற்ற உலகம் உருவாகக் குரல் கொடுப்போம்.