20.07.1969 நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் பஸ் ஆல்ட்ரினும் தரையிறங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நிலா போல் ஒத்த அமைப்பைக் கொண்டிருந்த ஒரு பாலைவனத்தில் அப்போலா-11 விண்வெளி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அங்கு செவ்விந்தியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர்.
ஒரு செவ்விந்திய பழங்குடி முதியவரிடம் தங்கள் நிலவுப் பயணத்தைப் பற்றிக் கூறினார். அப்போது அந்த முதியர், “எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.
“உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” என்று அவர்கள் கேட்டனர்.
அதற்குப் பதில் அளித்த முதியவர், “புனித ஆவிகள் நிலாவில் வாழ்வதாக பழங்குடியினராகிய நாங்கள் நம்புகிறோம். எங்கள் மக்கள் கூற விரும்புகிற ஒரு செய்தியை அந்த ஆவிகளிடம் உங்களால் எடுத்துச் செல்ல முடியுமா?” என்றார்.
என்ன செய்தி? என்று கேட்ட ஆராய்ச்சியாளர்களிடம் தன்னுடைய தாய்மொழியில், அந்த முதியவர் எதையோ சொன்னார். அவர் சொன்னதை அந்த ஆராய்ச்சியாளர்களை மனப்பாடம் செய்துகொள்ளச் சொன்னார். ஆராய்ச்சியாளர்களும் மனப்பாடம் செய்துவிட்டனர்.
அதற்கான பொருளை அந்த முதியவர் சொல்ல மறுத்துவிட்டார். இதற்கான பொருள் எங்களுக்கும் அந்த ஆவிகளுக்கும் மட்டுமே புரியும் என்று சொல்லிவிட்டார்.
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பியதும் அந்தப் பழங்குடி தாத்தாவின் மொழியை அறிந்திருந்த ஒருவரிடம், அவர்கள் மனப்பாடம் செய்திருந்ததை ஒப்புவித்து அதற்கான விளக்கத்தைக் கேட்டனர்.
அதைக்கேட்ட அந்த மொழிபெயர்ப்பாளர் உரக்கச் சிரித்துவிட்டுச் சொன்னார், “இந்த நபர்கள் உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிற எந்தவொரு வார்த்தையையும் நம்பாதீர்கள், இவர்கள் உங்களுடைய நிலங்களைத் திருட வந்துள்ளனர்”.
நன்றி- History of sapiens