சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் 28.08.2024 அன்று காலை 11.00 மணிக்குத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- மனித வளத்தைச் சீரழித்து, வன்முறைக்கு வித்திட்டு, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் மது மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது.
- அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் – 47 இல் கூறியுள்ள படி, மது மற்றும் போதைப்பொருள்கள் ஒழிப்புக்கான “தேசியக் கொள்கை” ஒன்றை உருவாக்குமாறு ஒன்றிய அரசை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.
- தமிழ்நாட்டில் மதுக் கடைகளை நிரந்தரமாக மூடுவதற்குக் கால நிர்ணயம் செய்து அறிவித்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.
- மது மற்றும் போதைப்பொருள்கள் நுகர்வை ஒழித்துக் கட்டுவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மக்களிடம் பரப்புரை மேற்கொள்ளும் திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக் குழு கேட்டுக் கொள்கிறது.
- ‘ பி.எம் ÿ ‘ என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றைத் திணிக்கும் பள்ளிகளைத் துவக்குவதற்கு ஒப்புக் கொண்டால்தான் தமிழ்நாட்டுக்குப் பள்ளிக்கல்விக்கான நிதியைத் தருவோம் என மிரட்டல் அரசியல் செய்து கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசை இந்த உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய கல்வி மேம்பாட்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்த உயர்நிலைக்குழு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
- தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் அண்மையில் நடத்தப்பட்ட “முத்தமிழ் முருகன் மாநாட்டில்”, அறநிலையத் துறையின் சார்பில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இதுவரையில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கப்பட்டுவந்த அணுகுமுறைகளிலிருந்து வழுவிச் செல்வதாக அச்சம் மேலிடுகிறது. இந்நிலையில், கல்வித்தளத்தை மதம் சார்ந்த கருத்துகளைத் திணிப்பதற்கு ஏதுவாகப் பயன்படுத்தும் சங்பரிவார்களின் அரசியல் நோக்கத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது என, மதசார்பின்மை கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டுள்ள திமுக அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
- தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.
- வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்-1989 இன் விதிகளின்படி, சாதிய வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையைச் அண்மையில் சில மாதங்களாக நிறுத்தப்பட்டதும், தேசிய எஸ்.சி ஆணையம் தலையிட்டதன் பிறகே மீண்டும் வழங்கப்பட்டதும் அதிர்ச்சியளிக்கிறது. இனிவரும் காலங்களில் அவ்வாறின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித் தொகையைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது .
- தமிழ்நாட்டில் எஸ்சி மக்கள் தொகை சுமார் 24 % ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது 1971 ஆம் ஆண்டில் இருந்த 18 சதவீதமாகவே இன்றும் நீடிக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அளவு உயர்த்தப்படாமல் இருக்கிறது. அதனை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப 24 % ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக் குழு கேட்டுக் கொள்கிறது.
- உச்ச நீதிமன்றம் உள் ஒதுக்கீடு தொடர்பாக அளித்த தீர்ப்பில், ‘ஒருமுறை இட ஒதுக்கீட்டு உரிமையை அனுபவித்தவர்களின் குடும்பத்தினர் இட ஒதுக்கீட்டு உரிமையை அனுபவிப்பதிலிருந்து விலக்கப்பட வேண்டும்’ என்கிற ‘கிரீமி லேயர்’ முறையை எஸ்சி வகுப்பினருக்கும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கிரீமி லேயர் அணுகுமுறை பிற்படுத்தப்பட்டோருக்கே பொருந்தாது என்ற நிலைபாட்டைக் கடந்த 30 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் தமிழ்நாடு அரசு, இப்போது எஸ்சி பிரிவினருக்கு அதை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பதை எதிர்க்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து கிரீமி லேயர் தொடர்பான கருத்துகளை நீக்குவதற்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என இந்த உயர்நிலைக் குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
- இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாப்பதற்கும், இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கும் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த உயர்நிலைக் குழு கேட்டுக் கொள்கிறது.
- 2024 செப்டம்பர்-9 ஆம் தேதி ஜெனீவாவில் துவங்கவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் 2009 இல் நடந்த இனப்படுகொலை தொடர்பான அறிக்கை விவாதிக்கப்பட உள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரையிலான ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எதையும் இலங்கை அரசு செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், செப்டம்பரில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்கும் இந்திய அரசு,
“2009இல் இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை இலங்கை அரசு வெளியிடவேண்டும். அந்தப் போரின்போது நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானங்களை இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும்” என வலியுறுத்த வேண்டுமாறு இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.