சிட்பில்ட்- உலகத் திரைப்படங்கள் யாவும் இந்த சிட்பில்ட் என்பவரின் திரைக்கதையை எப்படி எழுதுவது? என்ற புத்தகத்தைச் சுற்றியே சுழலும். வெற்றிபெறும் அத்தனைத் திரைப்படங்களும் இந்தச் சிட்பில்ட் தந்த சமன்பாட்டின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கும். சிறந்த இயக்குநர்களாக வலம்வரும் தற்போதைய இயக்குநர்கள் எல்லாம் சிட்பில்ட் புத்தகத்தைப் படிக்காமல் திரைக்கதை எழுத முடியாது. எனவே தங்கலான் திரைப்படத்தின் திரைக்கதை சிட்பில்ட் சமன்பாடுகளைப் பூர்த்தி செய்ததா என்ற கேள்விகளோடு தேடும்போது பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் தங்கத்தைத் தந்ததா? என்ற கேள்விக்கான பதிலைப் பெறமுடியும்.
- திரைக்கதை என்றால் என்ன? என்ற கேள்விக்கு சிட்பில்ட் பதில் தருவார். ஒரு சதுரங்க விளையாட்டு என்றால் காய்கள், காய்களை வைத்து விளையாடும் வீரர்கள், அதற்கான பலகை, சதுரங்க விளையாட்டு விதிமுறைகள். அப்படித்தான் திரைக்கதை என்றால் அதில் கரு, நோக்கம், கதைமாந்தர்கள், செய்கைகள், சிக்கல்கள், தீர்வுகள் இருக்க வேண்டும். இப்படிப்பார்த்தால் தங்கலான் படத்தில் பௌத்தச் சமயத் தத்துவத்தைப் பேச வேண்டும், பட்டியல் வகுப்பினரின் வரலாற்றைப் பேச வேண்டும் என்ற கருக்கள் பிணைந்திருக்கின்றன. அதற்கேற்ற கதைமாந்தர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். கதைமாந்தர்களுக்கான நோக்கம் இருக்கிறது. அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளையும் தங்கலான் பேசுகிறது. ஆனால் இந்தக் கதையின் நோக்கத்தை எளிதில் புரியவைக்கவில்லை என்பதே ஒரு குறைபாடாகப் பேசப்படுகிறது. உதாரணமாகப் பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதே இக்கதையின் மையக்கருவாக உள்ளது என்றால் புத்தர் இதை ஏன் சொன்னார்? என்பதற்கான விளக்கங்கள் குறைவாக உள்ளன.
- திரைக்கதையின் வடிவம் எது?
ஒரு திரைக்கதை என்றால் அதில் தொடக்கம், பிரச்சினைகள், தீர்வுகள் என மூன்று அமைப்புகள் இருக்க வேண்டும். தங்கலான் திரைக்கதையில் இருக்கிறதா? என்றால் ஆங்கிலேயர்கள் தங்கம் தேடுவதே தொடக்கம் என்று சொன்னாலும் கதையில் புத்தரின் பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதே இக்கதையின் தொடக்கமாகத் திரைப்படத்தின் இறுதியில் காட்சியமைக்கப்படுகிறது. எனவே தொடக்கம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. பிரச்சினைகள் என்று பார்த்தால் தங்கம் தேடுபவர்களுக்குப் பிரச்சினைகள் இருப்பதைத் திரைக்கதை தெளிவாக உணர்த்துகிறது. இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று நியமிக்கப்பட்ட ஆரன், ஆரத்தி கதைமாந்தர்களில் ஆரன் பாதியில் திசைமாற ஆரத்தியிடம் மட்டுமே பொறுப்புகள் விழுந்தன என்கிற பிரச்சினை பேசப்படுகிறது. முடிவு என்று பார்த்தால் தங்கம் தேடியது கிடைக்கிறது. ஆனால் பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பது பிரச்சினையாகவே தொடர்கிறது கதையில்.
- திரைக்கதைக் கட்டமைப்பு
ஒரு திரைக்கதையின் தொடக்கம், பிரச்சினை, தீர்வு ஆகிய மூன்றுமே வடிவம் என்று பார்த்தோம். ஆனால் இவைகளைக் கட்டமைக்க இணைப்புப் பாலமாகச் செயல்படுபவை ஆங்கிலத்தில் ப்ளாட் (plot) என அழைக்கப்படுகிறது. தொடக்கத்தையும் பிரச்சினையையும் இணைப்பது முதல் ப்ளாட் பாய்ண்ட் எனவும் பிரச்சினையையும் தீர்வையும் இணைப்பது இரண்டாவது ப்ளாட்பாய்ண்ட் எனவும் அழைக்கப்படுகிறது. தங்கலான் திரைக்கதையில் முதல் ப்ளாட்பாயிண்ட் என்பது தங்கத்தைத் தேடிப்போனால் ஆரத்தி என்பவள் பிரச்சினையாக இருப்பாள் என்பதே, இரண்டாவது ப்ளாட் பாயிண்ட் என்பது தங்கம் கிடைக்கும் நேரத்தில் ஆங்கிலேயர்கள் உழைப்பவர்களைச் சுரண்டுவார்கள் என்பதே. தங்கலானில் இந்தக்கட்டமைப்புச் சரியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
- பொருள்
கதை உருவாகப் பொருள் வேண்டும். இங்குப் பொருள் என்பது subject என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இந்தப் பொருள் என்பது தலைமைக் கதாநாயகன் அல்லது தலைமைக் கதாநாயகியின் நோக்கம் மற்றும் அவர்களின் செயல்கள் இணைந்தது ஆகும். தங்கலானைப் பொருத்தவரை தங்கலான் என்கிற கதாநாயகனின் நோக்கம் தம் சமூக இழிவைப் போக்குவது இதற்காக ஆங்கிலேயருடன் சென்று தங்கம் தேடிச்சம்பாப்பது, ஆரனின் நோக்கம் இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பதைத் தடுப்பது, ஆனால் ஆரனின் வாரிசான காடையன் அந்த எண்ணத்தில் விலகி எதிரிகளுடன் இணைவதால் நிகழ்த்தப்படும் செயல்கள். ஆக மூன்று கதாபாத்திரங்களுக்கும் செல்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பெண் கதைமாந்தர்களான ஆரத்தி, எதிரியான ஆங்கிலேய கம்பனிக்கும், மற்ற கதைமாந்தர்களுக்கும் உரிய செயல்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள வகையில் இந்தக் கதையின் திரைக்கதை subject சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
- கதைமாந்தர் உருவாக்கம்
தங்கலான் திரைக்கதையில் பல கதைமாந்தர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் கதைமாந்தர்களில் தங்கலான் அவன் குடும்பம், ஆதிக்க ஜாதியினர், ஆங்கிலேய கம்பனி வருகை ஆகிய மெய்க்கதைமாந்தர்களாக வாழ்ந்தவர்கள் என்றும் ஆனால் அவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டவை யாவும் புனைவுகள் என்றும் புரிந்துகொள்ளலாம். இந்தக் கதைமாந்தர்களை உருவாக்கும்போது உட்புற உருவாக்கம், வெளிப்புற உருவாக்கம் என்கிற இரண்டு செயல்பாடுகளைச் சிறந்த திரைக்கதையாசிரியர்கள் கையாள்வர். அதாவது சந்திரமுகி படத்தில் ஜோதிகா சிறுவயதில் எப்படி இருந்தாள்? அதனால் தான் அவள் பெரியவளான பிறகு அப்படி எதிர்வினை ஆற்ற முடிகிறது என்பதை உதாரணமாகக் கொள்ளலாம். தங்கலான் சிறுவயது முதல் மூதாதையரின் கதைகளைக் கேட்டு வளர்ந்தவன், எனவே அவனால் ஆரத்தி கதாபாத்திரத்தை உண்மை என நம்ப முடிகிறது. இவ்வாறாகத் தலைமை கதைநாயகன், தலைமைக் கதாநாயகியின் உள்புற செயல்களைத் திரைக்கதையில் பா.ரஞ்சித் கையாண்டிருக்கிறார். எனவே தான் நாம் திரையில் பார்க்கும் வெளிப்புறத் திரைக்கதையில் நமக்குக் கதை சொல்கிறார். இதில் உள்புற திரைக்கதையாக்கமே சரியாகப் புரியவில்லை என்கிற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது.
- கதைமாந்தரின் தேவை
ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கலாம். ஆனால், அந்தக் கதாபாத்திரம் இந்தக் கதைக்கு 4 வகைகளில் தேவைப்பட வேண்டும். 1. புத்தரின் பற்றே துன்பத்திற்குக் காரணம் என்ற தத்துவத்தைப் புரிய வைக்கவும், தங்கத்தைத் தேடவும், ஆதிக்க ஜாதியினரிடமிருந்து விடுலை பெறவும் ஒரு கதைமாந்தர் தேவைப்படுகிறார். 2.தங்கலான் என்ற கதைமாந்தருக்கு ஒரு கருத்து நிலை வேண்டும் (Point of view) இதில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்திற்கு இந்தக் கருத்து நிலை சரியாகப் பொருந்துகிறது. 3.கதைமாந்தருக்கு ஒரு உறுதியான மனநிலை வேண்டும் (Attitude) இதில் ஆரத்தி மற்றும் ஆங்கிலேய கதாபாத்திரத்திற்கு இந்த உறுதியான மனநிலைகள் பொருத்தப்பட்டுள்ளன. 4.திரைக்கதையில் ஒரு மாற்றத்தை அந்தக்கதாபாத்திரம் அடைய வேண்டும் என்கிற விதிப்படி ஆரத்தியை எதிர்க்கும் தங்கலான் கடைசியில் மனம் மாறி ஆரத்தியின் நோக்கத்தை ஏற்பதும், தங்க லாபத்தில் சமபங்கு என்று சொல்லிய ஆங்கிலேயன் கடைசியில் மனம் மாறுவதும் இத்திரைக்கதையில் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன.
- கதைநாயகன் உருவாக்கம்
திரைக்கதையில் கதைநாயகன் உருவாக்கம் என்பது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரஜினிக்காகக் கதைத் திட்டத்தை (idea) உருவாக்குவது, கதைத்திட்டத்திற்காகக் கதைநாயகர்களை உருவாக்குவது. இந்த வகையில் இரண்டாவது திட்டத்தைப் பா.ரஞ்சித் கையில் எடுத்திருக்கிறார். அதாவது தான் தேர்ந்தேடுத்த கதைத்திட்டத்திற்குக் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கிறார். ஆனால் இதைத் திரைக்கதையாக்கும்போது கதைநாயகனாக நடிக்கும் விக்ரம் அவர்களுக்கு ஏற்ப தங்கலான், காடையன், ஆரன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களையும் கொடுத்திருக்கிறார். ஆக, இரண்டுவிதமான கதைநாயகன் உருவாக்கத்தையும் பா.ரஞ்சித் பயன்படுத்தியிருக்கிறார்.
- திரைக்கதையின் தொடக்கம்
ஒரு திரைக்கதை எங்குத் தொடங்கப்பட வேண்டும் என்றால்? இக்கதையில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள், இந்தக் கதை சொல்ல வருவது என்ன? இந்தக் கதையின் காலகட்டம், சூழ்நிலை ஆகியவை யாவுமே தொடக்கத்தில் சொல்லப்பட வேண்டும். பா.ரஞ்சித் இந்தத் திரைக்கதையில் இடம்பெறவுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களையும் புத்தர் உட்பட அனைவரையும் தொடக்கத்திலேய அறிமுகப்படுத்துகிறார். இந்தக்கதை தங்கத்தைத் தேடும் கதை, ஆதிக்கத்தை எதிர்க்கும் கதை என்று தொடங்குகிறார். ஆனால், பௌத்தச் சமயத்தின் கருத்தைப் பேசுவது என்பதை மட்டும் மறைத்து வைத்துள்ளார்.
- தொடக்கக் காட்சியும் இறுதிக்காட்சியும்
ஒரு திரைப்படத்தின் தொடக்கக் காட்சி எது என்பது திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. மைதான் கால்பந்து தொடர்பான படத்தில் தொடக்கக் காட்சியே ஒலிம்பிக்கில் கால்களில் ஷு இல்லாமல் விளையாடும் இந்திய கால்பந்து அணி காட்சிப்படுத்தப்படும். மக்கள் உடனே அந்தக்காட்சியே பரிதாபத்துடன் ஒன்றுகிறார்கள். ஷக்தே இந்தியா படத்தில் ஷாருக்கான் இந்திய அணியைத் தோல்வியடையச் செய்துவிட்டார் என்கிற எதிர்மறைச் சிந்தனையில் வெறுப்பதா? எதிர்ப்பதா? என்று நாயகனைப் பார்க்கும் வகையில் தொடங்குவார்கள். கபாலி படத்தில் ரஜினியின் புத்தகம் படித்து மூடிவைக்கும் தொடக்கக் காட்சியே அனைவரையும் கைத்தட்ட வைக்கும். தங்கலான் திரைக்கதையில் இந்தத் தொடக்கம் தவறவிட்டப்பட்டதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் நேராகக் கதை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலேயர் தங்கம் தேடும் காட்சியிலிருந்தே படத்தைத் தொடங்குகிறார் இயக்குநர்
(தொடரும்)
செந்தமிழ் சரவணன்
9360534055