1991ல் மிகப் பெரிய வெற்றி பெற்ற ஜெயலலிதா தலைமைலியான அதிமுக, 1996 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.
அதிமுக போட்டியிட்ட 168 தொகுதிகளில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவிகிதமும் 21.5 எனச் சரிந்தது.
அதிமுக கூட்டணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிட்ட, 64 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அதன் வாக்கு சதவிகிதம் 5.6 மட்டுமே. தமிழ்நாடு காங்கிரசின் மோசமான தோல்வியாக இது அமைந்தது.
எதிர்த்துக்களம் நின்ற மு.கருணாநிதி தலைமையிலான, திமுக, தான் போட்டியிட்ட 182 தொகுதிகளில் 173 தொகுதிகளை வென்றது. அதன் வாக்குசதவிகிதத்தை 42.1 ஆக உயர்த்திக் கொண்டது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கருப்பையா மூப்பனார் தலைமையிலான, தமிழ்மாநிலக் காங்கிரஸ், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட 40 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியைடந்து, மற்ற 39 தொகுதிகளிலும் வென்றது. தமிழ்நாடு அரசியலில் புதியதாகத் தோன்றிய கட்சி 39 தொகுதிகளில் வென்றது சாதனையாகும்.
திமுக கூட்டணியிலிருந்த இந்திய கம்யூனிஸ்ட் தான் போட்டியிட்ட 11 தொகுதிகளில் 8ல் வெற்றி பெற்றது. அதேபோல் இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியும் ஒன்றில் பெற்றி பெற்றது.
மூன்றாவது அணியாகக் களம் இறங்கிய வைகோ தலைமையிலான மதிமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி, தோல்யைச் சந்தித்தது. மதிமுக தான் போட்டியிட்ட 177 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதாளம் ஆகியன மதிமுக கூட்டணியிலிருந்தாலும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.
எனினும் 7.9 வாக்கு சதவிகிதத்தை மதிமுக கூட்டணி பெற்றது. வைகோவும் தான் போட்டியிட்ட விளாத்திக்குளம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
நான்காவது அணியாகப் போட்டியிட்ட இராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும், வாழப்பாடி ராமதாஸ் தலைமையிலான திவாரி காங்கிரசும் 4.6 சதவிகித வாக்குகளைப் பெற்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி தான் சார்ந்த வன்னியர் சமூக வாக்குவலிமையால் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.
1991 தேர்தலில் ராஜீவ் காந்தி உயிர்பறிப்பு அலையால், திமுக கூட்டணி தோற்று, அதிமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. ஆனால்,1996 சட்டமன்றத் தேர்தல் என்பது, ஜெயலலிதாவின் ஊழல் குறித்த பிரசாரங்களை மக்களிடம் கொண்டுசென்றதால் ஒரு அலையை ஏற்படுத்தியது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துக் கட்சி உயர்மட்டத் தலைவர்களும் தோல்வியைத் தழுவினர்.
திமுக பலமான பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் பிடித்தது.








