2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விஜய் எதிர்பார்த்ததுதான். திமுக வீட்டிலிருந்தும் அதிமுக வீட்டிலிருந்தும் 5 ஓட்டுகளிலிருந்து தலா இரண்டு ஓட்டுகளைப் பெற்றுவிட்டால் போதும் என்கிற அவர் கணக்கு வெற்றி பெற்றிருக்கிறது.
விஜய் வெற்றி பெறமுடியாது என்று சொல்லப்பட்ட காரணங்களை இளையதலைமுறை நொறுக்கித்தள்ளி இருக்கிறது.
அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால், அரசியலில் அனுபவம் உள்ளவர்களில் பெரும்பான்மையோர் ஊழல்வாதிகளாகவும் ஜாதிப் பற்றாளர்களாகவும் இருந்துள்ளனர். அப்படிப்பட்ட அனுபவம் தேவையில்லை என்று இளைய தலைமுறை முடிவு செய்துள்ளது.
கொள்கை, கோட்பாடு விஜய்க்குத் தெரியாது என்றார்கள். ஆனால், தாங்கள் சொல்லக் கூடிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் திராவிடக் கட்சிகளோ, பொதுவுடைமைக் கட்சிகளோ, காங்கிரஸ் கட்சியோ தன் குடும்பத்தினரிடம் கூடக் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. இவர்கள் பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோரை வெறும் படங்களாக மட்டும் கட்டமைத்தார்கள். ஆனால், அதைவிடக் கூடுதலாகவே விஜய் பெரியாரையும், பாபாசாகேப் அம்பேத்கரையும் தன்னுடைய மேடைகளில் பிரபலப்படுத்தினார்.
விஜய் ரசிகர்கள் மீதான தற்குறி கேலிப்பேச்சுகள், அவர்களின் சுயமரியாதையைத் தூண்டிவிட்டன. இந்தச் சுயமரியாதை எழுச்சி காரணமாகவே, தங்கள் இல்லங்களிலும் சுற்றுவட்டாரத்திலும் விஜய் மீதான நம்பிக்கையை விஜய் ரசிகர்கள் எளிதில் விதைத்தனர்.
திமுகவின் சாதனைகள் பாராட்டக்கூடியதாக இருந்தாலும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, எதிர்காலம் குறித்த செயல்திட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்குறி விஜய்க்குச் சாதகமாக மாறின. மாஸ் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ ஆகிய ஈர்ப்புகளைப் இளைஞர்களும் பெண்களும் ஏற்றுக் கொண்டனர்.
திமுக ஆட்சியில் நிலவிய ஊழல், அரசு அதிகாரிகள் மக்களிடம் நடக்கும் மரியாதை குறைவான செயல்பாடுகள் திமுக பேசிய சித்தாத்தங்களை விடப் பெரிதாக மக்களைப் பாதித்தன. அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களைம் கலைஞர் மு.கருணாநிதி அரவணைத்ததுபோல், மு.க.ஸ்டாலின் அரவணைக்கத் தவறிவிட்டார்.
பட்டியல் வகுப்பினரின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவில்லை. அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய், கழிவறைகள் ஆகியவற்றில் குத்தகைக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் இலஞ்சத்தனம், பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.
கல்வி, மருத்துவம், போக்குவரத்துத் துறைகளில் திமுக ஆட்சி செய்த சாதனைகளை விட, பொதுமக்கள் எளிதில் சந்திக்க முடியாத அளவுக்கு நிலவிய அரசு நிர்வாகம், திமுக மீதான வெறுப்புக்கு மாறாக, விஜய் மீதான ஈர்ப்புக்குக் காரணமாக மாறியது.
பாஜக எதிர்ப்பு என்ற நிலையை விஜயும் எடுத்ததால், திமுகவிற்கு அந்த ஆயுதத்தைப் பயன்படுத்த முடியவில்லை.
தமிழ்நாட்டு மக்களின் திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகிய இரண்டையும் விஜய் பேசியதை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
விஜய் வெறும் ஈர்ப்புக்காக மட்டுமே வெற்றிபெற்றார் என்று சொல்லப்படுவதற்கு முன், தங்கள் கொள்கைகளை இளையதலைமுறையிடம் சேர்க்கத் தவறியதன் விளைவே இது என்று திராவிட, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இயக்கங்கள் உணர வேண்டும்.
ஓட்டுக்குப் பணம் என்கிற கொடூரமான கலாச்சாரம் தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாகவே ஊறிப்போயிருந்தது. பணம் இல்லாதவனோ, பணம் கொடுக்காதவனோ வெற்றிபெற முடியாது என்கிற இழிவான நிலையை மாற்றிய உண்மையான ஹீரோவாக விஜய் மாறியிருக்கிறார். இனிமேல் பணம் கொடுத்துத்தான் ஓட்டு பெற வேண்டும் என்கிற நிலை தமிழ்நாட்டில் வராத வகையில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உண்டு. ஏனெனில், வரப்போகும் உள்ளாட்சித்தேர்தலில் ஓட்டுக்குப் பணம் என்கிற நிலை மீண்டும் முளைவிடலாம்.
தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை வலிமையாகப் பார்க்கப்படுவது பாஜகவின் நுழைவைத் தடுப்பதுதான். அதற்கான ஆட்சியை நடத்தவேண்டிய பொறுப்பை விஜய் ஏற்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைச் சிதைக்கும் சூழலில், ஆர்எஸ்எஸ்க்கு எதிரான ஆட்சியை விஜய் வழங்கினால், தமிழ்நாட்டு மக்கள் எம்ஜியார் மீது செலுத்திய அன்பை விடக் கூடுதல் அன்போடு விஜயை அரவணைப்பர்.
ஊழலுக்கு எதிரான முழக்கத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கும் விஜய் ஊழலற்ற ஆட்சியையும், ஆர்எஸ்எஸ்க்கு எதிரான ஆட்சியையும் வழங்குவார் என எதிர்பார்ப்போம்- செந்தமிழ் சரவணன்
தினவானம் இணைய இதழுக்காக.







